About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/08/26

August 26 ...2005

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.
.....
தன் அம்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை என்று வாழ்ந்த மகன்.
2002ல்
ஒரு பெரிய U .S கம்பெனியில் வேலை வந்தும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
(அவன் நண்பர்கள் என்னைத்தான் திட்டினர்.நீங்கள்தான் கார்த்தியின் எதிர் காலத்தை கெடுக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் மைக்ரோ சாஃப்ட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.)
நான் கார்த்தியிடம் ''போய் வா கார்த்தி.'' என்றுதான் சொன்னேன்.உறுதியாக மறுத்து விட்டான்.அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற வைராக்கியம்.அது எவ்வளவு பெரிய வேலை ,எவ்வளவு பெரிய சம்பளம் என்றாலும் சரி அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
ஒரே அடியாக விட்டு விட்டு போய் விட்டான்.
எப்போதும் புலம்பல்.
அழுகைதானா
என்று குற்றம் சொல்பவர்களுக்கு ..
கார்த்தி போல் ஒரு மகன் கிடைக்க 100 கோடி ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் அன்பு, அறிவு, அடக்கம் ...சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அன்பு மகனை இழந்த நாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவால் தவிக்கும்
கார்த்திக் அம்மா 

2019/08/24

மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே = கார்த்தி

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

2019/08/22

அற்புதமான நிலா

என் முழு நிலவு
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.

அன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்று பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க ....சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2019/08/19

பால் விலையேற்றம்

எனக்கு ஒன்று புரியவில்லை.
பால் விலை 6 ரூ அதிகம் என்றவுடன் இந்த கூச்சல் ,கூப்பாடு போடுகிற மக்களே ,  நேற்று 20 ரூ வாங்கிய சோப் இன்று 30 ரூ .எண்ணெய் ,பேஸ்ட் ,இன்னும் அத்தனை பொருட்களின் விலையும் அதிகம் அதிகம் அதிகரித்துள்ளது.
இதற்கெல்லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.
ஒரு துணி கடையில் போனால் சாதாரண சுடிதார்,etc விலையை பார்த்தால் தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் வாங்காமலா இருக்கிறார்களா?
தங்கம் விலை விர்ர்ர் .ஆனால் வாங்காமலா இருக்கிறார்கள்.?மக்கள் எப்போது ஏழை ?????????
எப்போது பணக்காரர்கள்????????????
இதற்கெல்லாம் மேல் மீடியா .
அப்பாடா ,நாட்டில் பல குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான் .
புகையை ஊதி ஊதி பெரு நெருப்பாக்கி குளிர் காய்கிறார்கள்.
.....
ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
எல்லாம் இலவசமாக தருவது போல்
....பால் ,ணெய்,தயிர் எல்லாம் இலவசமாக கொடுக்கலாம்.
வரி கட்டத்தான் நாங்கள் இருக்கிறோமே.

2019/08/02

01 August 2005

01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.

எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2019.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா