இரண்டு விஷயங்களைப் பற்றி பதிவு போட வேண்டாமென்று நினைத்தேன்.
தாய்மை : எவ்வளவு புனிதமான, சந்தோஷமான, பூரிப்பான விஷயம்.பணம், புகழ் ,செல்வாக்கு, செல்வம் எல்லாம் நம் குழந்தையின் புன்சிரிப்பிற்கு ஈடாகுமா ?இப்போது ஒருவரின் கர்ப்பம் பற்றி இவ்வளவு பரபரப்பு. அவர்களின் சொத்தில் ஒரே ஒரு பங்கு செல்வம் என்னிடம் இருந்திருந்தால் நான் வேலைக்கே சென்றிருக்க மாட்டேன். அப்படியுமே முதல் முதலாய் பார்த்த ''' துணைப் பேராசியர் ''Assistant professor '' in 1982 வேலையை விட்டு விட்டு கார்த்தியை கொஞ்சுவதிலேயே இன்பம் கண்டவள் நான்,.செந்திலும் பிறந்து அவன எல்/கே/ஜி/ யில் அட்மிஷன் போட்டு விட்டுதான் பள்ளி ஆசிரியர் வேலைதான் குழந்தைகளுடன் இருக்க நிறைய நேரம் கிடைக்குமென்று இந்த வேலையில் சேர்ந்தேன். [ இந்த வேலையும் சாதரணமாக பெற்று விடவில்லை. எம்.ஜி.ஆர் புண்ணியத்தில் TNPSC exam எழுதி ரேங்க்க் வாங்கி சேர்ந்த வேலை. எம்ப்ளாய்மென்ட் பதிவு அடிப்படையில் வாங்கிய வேலை அல்ல ] இன்று அதே துணை பேராசியர் வேலையில் இருந்திருந்தால் எட்ட முடியாத உயரத்திற்கு போயிருப்பேன். ஆனால் துளி கூட வருத்தமில்லை எனக்கு.
நான் இப்படியென்றால் என் அண்ணாவின் குணமும் அதுவேதான். அவர் ஒரு மருத்துவர். பெரிய , சொந்த மருத்துவமனை. திறமையான டாக்டர். ஆனால், என் மகன்கள் கார்த்திக் , செந்தில், அவருடைய மகன்கள் இருவர் சேர்ந்து விட்டால் போதும். கும்மாளம்தான். ;;முள்ளும் மலரும் '' படத்தில் வரும் 'ரஜினி ' கேரக்டர்தான். என் அப்பாவோ 'நோயாளிகள் கீழே காத்திருக்கிறார்கள் ''என்று கத்துவார். எங்கள் காதில் விழுந்தால்தானே. எங்கள் சொர்க்கம் எங்களுக்கு.
இப்படி குழந்தைகள் மீது அதீத அன்பு வைத்ததால்தானோ என்னவோ ,இப்படி பறி கொடுத்து வாடி நிற கிறேன்.
விபத்து:
கே.பி.என்.
இந்த பஸ்ஸில் அடிக்கடி பயணித்திருக்கிறேன். அப்படி ஒரு சுகமான பயணமாக இருக்கும். அருமையான படுக்கை, தலையணை, வெள்ளை படுக்கை விரிப்பு,எந்த பக்கமிருந்து யாரும் பார்க்க முடியாத அளவுக்கு, அழகான ஸ்க்ரீன் என்று பிரமாதமாயிருக்கும் . சேலம் வந்தால்தான் தெரியும். அது வரை பஸ்ஸில் பயணித்த உணர்வே இருக்காது.
ஒரு முறை இதே ஓட்டுனர் ஒட்டி வர , நான் மட்டும் தனியாக வர நேர்ந்தது. எங்கள் வீடு, இருக்கும் இடத்தருகே பஸ்ஸை நிறுத்தி, நான் ரோடை தாண்டும் வரை பார்த்திருந்து பிறகுதான் சென்றார். அப்படி ஒரு நல்ல டிரைவர். அன்று எல்லோருக்கும் போதாத வேலை. விதி.
அடுத்த விபத்து: சேலம் அருகே ரயில்வே கிராசிங்கில் கேட்டருகே நின்று கொண்டிருந்த ஓம்னி வேன் மீது பின்னால் வந்த பள்ளி பேருந்து இடிக்க , ரயில்வே கேட்டை தள்ளிக் கொண்டு போய் நடந்த விபத்து. இதில் அந்த வேன் ஓட்டுனரின் குற்றம் என்ன? அவர் மிகக் சரியாக ரயில் போவதற்காக நிற்கிறார். ஆனால் யாரோ ஒருவர் செய்த பிழையால் அவர் உயிர் இழக்கிறார்.
இப்படித்தான் நடந்தது கார்த்திக்கிற்கும் ..யாருடைய தவறோ, என் அன்பு மகன் பலியானான்.
அந்த துயர் தாங்காமல், நான் பிரமை பிடித்து நின்ற வேளையில் , என்னைக் குறை கூறி இந்த உலகம் பேசிய பேச்சிருக்கிறதே. 'அவனை ஹெல்மெட் போடாமல் எப்படி அனுப்பலாம்? என்ன ஒரு பொறுப்பற்ற தாய் ?'' என்று ஒருவர். ''ஏன் சென்னையில் வேலை கிடைக்கவில்லையா ? பெங்களூருதான் அனுப்ப வேண்டுமா ?'' என்று ஒருவர். '' மகன் பற்றி அதிக கர்வம் .அதனால்தான் இப்படி ''
அப்பப்பா, நொந்து நூலாகி விட்டேன்.
இந்த விபத்துகள் நடக்கவில்லையா?
என் சோகமும், பலரின் வார்த்தைகளால் பட்ட காயங்களும் சிறிதும் குறையவில்லை. விபத்து என்ற வார்த்தையை படிக்க நேர்ந்தால் ,இந்த எண்ணங்கள் வரும். நிறைய நாளாக எழுத நினைத்தது. இன்று எழுதி விட்டேன்.
கார்த்திக் அம்மா
1 comment:
Hope writing does some to mind...
Post a Comment