ஓசூர் : ஓசூர் அருகே ஐந்து யானைகள் ஊருக்குள் புகுந்தது. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தை, யானைகள் விரட்டியதில், வனத்துறை ரேஞ்சர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கெலமங்கலம் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 யானைகள், கடந்த ஒரு வாரமாக ராயக்கோட்டை மலைக்கிராமங்களில் புகுந்து, அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 9ம் தேதி பாவாடப்பட்டி கிராமத்தில் புகுந்த யானைகள் கூட்டம், பயிருக்கு காவலுக்கு இருந்த முனியப்பனை ,50 மிதித்துக் கொன்றன. நேற்று முன்தினம் முத்தம்பட்டி கிராமத்தில் புகுந்து யானைகள் துரத்தியதால், விவசாயி நஞ்சன், 50 படுகாயமடைந்து இறந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சூளகிரி அடுத்த உள்ளட்டி தென்பெண்ணை ஆற்றுக்கரையில், ஐந்து யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன. அதன் பின், இரவு முழுவதும் சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்தன. அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன் மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, இரவு முதல் யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வரை, சூளகிரி அடுத்த உள்ளட்டி, கரகம்பட்டி, முத்தம்பட்டி, அலேசீபம் கிராமங்களை மையமாக கொண்டு யானைகள் சுற்றித் திரிந்தன. உள்ளட்டியில் இளைஞர்களுடன் இணைந்து யானைகளை விரட்டமுயன்ற வனத்துறையினரை, யானைகள் துரத்தியடித்தன. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், இளைஞர்களும் நாலாபுறமும் சிதறிஓடினர். அப்போது, ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன், யானையை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன், மற்ற ரேஞ்ச் வனத்துறையினரை வரவழைத்து, ஊருக்குள் புகுந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கற்களை வீசியும், பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்தினர். மிரண்ட யானைகள் கூட்டம், கரகம்பட்டி, முத்தம்பட்டி, உத்தனப்பள்ளி வழியாக ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் சென்றன. காட்டிற்குள் சென்ற யானைகள் கூட்டம், மீண்டும் திரும்பி வரும் என்ற அச்சத்தில் விவசாயிகள், இரவு காவலுக்கு தோட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
மூன்று மாதத்தில் ஏழு விவசாயி பலி : ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், இதுவரை யானைகள் தாக்கி, 52 விவசாயிகள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும், ஆறு பேர் இறந்துள்ளனர். கடந்த மூன்று மாதத்தில், ஏழு பேரும், கடந்த மூன்று நாளில் இரு விவசாயிகளும் பலியாகியுள்ளனர்.
கடந்த 2 ஆண்டில், 228 முறை யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்துள்ளன. வனத்துறையினர், யானை வரும்போது மட்டும் விரட்டுவதற்கு செல்கின்றனர். மற்ற நேரத்தில் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடாததால், யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
யாரப்பா , உங்களை அவசரப்பட்டு வீரப்பனை கொல்ல சொன்னது? அவர் இருந்த வரை அடங்கி கிடந்தன. இப்போது கேட்பதற்கு ஆளில்லாமல் யானைகள் அவை இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்றன.தேவையா?
No comments:
Post a Comment