About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/06/23

என் அன்பு மகன் கார்த்தி தன கைப்பட எழுதிய கவிதை இது.
Handwriting Recognition என்ற மென்பொருள் முயற்சிக்காக
அவன் எழுதியது.
இந்த கவிதையை என்னையும் எழுதி தர கேட்டது என் உயிர்.
நானும் எழுதி கொடுத்தேன்.
கார்த்தியின் கையெழுத்து இதை விட நன்றாக இருக்கும். ஆனால் மாற்றி மாற்றி எழுதினால் என்ன செய்ய முடியும் என்பதற்காக இப்படி எழுதியது என் தங்கம்.
அதனை தட்டச்சு வடிவில் தருகிறேன்.

''தமிழ்த்தாயின் தாள் பணிந்து ''நான் எழுதும் ''
சிறு வாழ்த்து தமிழ் கூறும் நல்  உலகுக்கு.
சாதி மத பேதமின்றி
இறைவனின் உருவமிது என உணர்த்தினால்
மனத்தின் கண் பிரிவு வருதல் நிச்சயம் என உணர்ந்த
தெய்வப் புலவன்
இறைவனின் திருவடி எனும் தாமரைத்தாள் பற்றி பாடி போனான்.
அவன் கருத்துணர்ந்து
அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து
சிறப்புறுவோமாக .
...... ......இதை உரைநடையில் தருகிறேன்.
...... தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன்  குறள்களில் எந்த இடத்திலும் தெய்வத்திற்கு ஒரு உருவம் தந்திருக்க மாட்டார்.
ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட உருவம் என்றால் ஒரு மதத்திற்கு உரியதாகி அடுத்த மதத்தினர் மனம் புண்பட்டு மத துவேஷம் ஏற்பட்டு மக்களிடையே பிரிவு சண்டை தோன்றலாம் என்பதால் ''திருவடி'' பற்றி மட்டுமே சொல்வார்.
இதைத்தான் கார்த்தி சொல்லி எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று சொல்கிறான்.
தமிழ்த்தாயின் தாள் பணிந்து '
இது எழுதப்பட்ட வருடம் 2001..என் கண்மணியின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது.அதை சொல்வதில் எவ்வளவு தன்னடக்கம் இருக்கிறது .அன்றே தமிழ் பற்றை வெளிப்படுத்திய பாங்கு.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட அந்த தெய்வ மகனை இந்த உலகத்திலிருந்து விரட்ட அந்த தெய்வத்திற்கு எப்படித்தான் மனம் வந்ததோ?இத்தனை 1000 கோடி பேர் இருக்கும் இந்த உலகில் என் மகனுக்கு ஒரு துளி இடம் இல்லாமல் போயிற்றா?
என் தெய்வமே  உன்னைக் காணும் நாளும் வருமோ?
கார்த்திக் அம்மா




2014/06/19

எப்போதும் ஒரு சோகமான விஷயம் அல்லது நன்றாக இல்லாத செய்தியை பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறேனே ,.... ஏதாவது  ஒரு நல்ல விஷயத்தைப் பற்றிதான் எழுத வேண்டும் என்று ஒரு நல்ல செய்திக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்.
இன்றுதான் ஒரு செய்தி கிடைத்தது.
ஹோமி பாபா என்ற ஒரு அணு ஆராய்ச்சியாளர் இருந்தார். எத்தனை பேருக்கு தெரியுமோ?1966 ல் விமான விபத்தில் ''கொலை'' செய்யப்பட்டார்.
வளர்ந்து வரும் எந்த அறிவாளிகளும்  இப்படி விபத்தில் மாட்டுவது ( மாட்ட வைக்கப் படுவது ) பல வருடங்களாக நடக்கும் ஒரு விஷயம்.எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.
எனக்கு இவரின் இறப்பில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு.
99 வயதில் இறக்கும் ஒரு அரசியல்வாதி, ஒரு நடிகர் பற்றி ''இவரது மறைவு நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என்று ஊடகங்களும் தலைவர்களும் அறிக்கை விடும் போது எரிச்சலாக இருக்கும்.
ஆனால் ஹோமிபாபாவின் இறப்பு உண்மையிலேயே நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
நேற்று அவருடைய வீடு ஏலத்திற்கு வந்துள்ளது.
யாரோ ஒரு பெயர் சொல்ல விரும்பாத நல்லவர் 112 கோடி அதிகம் கொடுத்து வாங்கியுள்ளார்.
ஒரு நடிகை பால் குடித்த கிண்ணத்தை ஒரு அண்டா தண்ணீரில் கழுவி அந்த நீரை ஒரு கிண்ணம் 10 ரூபாய் என்று விலை வைத்து விற்க அதை வாங்க வரிசையில் நின்று வாங்கி குடித்து ஜன்ம சாபல்யம் அடைந்த மகான்கள் வாழும் இந்த நாட்டில் ....
ஒரு scientist வீட்டை வாங்கிய அவருக்கு என் வணக்கங்கள். வாழ்க
அன்புடன் ,
கார்த்திக் அம்மா

2014/06/11

என் கணவர்  மேட்டூர் அணையில் A E E யாக பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி :
அவர் சிவில் துறை என்பதால் அணையின் பராமரிப்பு பொறுப்பு அவருக்கு..
    அணையில் நீர் குறைவாக இருக்கும் போது சுரங்கமின் நிலையம் செயல்படாது.அந்த நாட்களில்தான் அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்படி ஒரு நாள் என் கணவர் சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
திடீரென  ஏதோ ஒரு சத்தமும் அதிர்வும் கேட்டிருக்கிறது.
என் கணவரும் அவருடன் சென்ற இன்னும் இருவரும் வரும் அபாயத்தை உணர்ந்து அதிர்ந்துள்ளனர்.
அது என்னவென்றால், சுரங்கத்திற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் வேகம் அது பற்றி தெரிந்தவருக்குதான் புரியும்.
விபரீதத்தை உணர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் ஓட ,தண்ணீர் துரத்த ...,நூலிலையில் தப்பித்தனர்.தவறு யார் மீது ? ஆய்விற்கு செல்கிறேன் என்று இவர் சொல்லவில்லை.ஏன்  என்றால் அணையின் நீர் மட்டம் அவ்வளவு குறைவாக இருக்கும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவர் தைரியமாக சென்று விட்டார்.
சிவில் A E E  உள்ளே சென்றிருப்பார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
......  ....
இந்த பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?
24 பிஞ்சு முகங்கள் அணை நீரில் அடித்து செல்லப் பட்ட செய்திதான்.
நெஞ்சு பதறுகிறது.எல்லோர் முகமும்  கார்த்தி முகமாக தெரிகின்றன.அந்த பெற்றோர்கள் இடத்தில் என்னை நிறுத்துகிறேன்.அந்த வேதனை என்ன என்று எனக்கு தெரியும்.
ஆனால் இதில் யாரை தவறு சொல்வது?
இத்தனை மாணவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருப்பார்கள் என்று அணை அதிகாரிகள் எதிர்பாராதது.
விதி.As always i say its ''HAPPENISM '' நிகல்விசம் .இன்று இது இப்படி நடக்கிறது.இதற்கு முன் வினையோ ,கர்மாவோ ,பாவமோ புண்ணியமோ காரணம் இல்லை.
இந்த நிமிடம் இது இப்படி நடக்கிறது. அவ்வளவுதான்.
ஏற்றுக் கொள்ள முடியாத, தீராத சோகம்தான்.நான் அனுபவிக்கிறேனே.கண்ணீருடன் வாழ்க்கைதான்.அந்த பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?விதியே உன் விளையாட்டு எல்லை மீறுகிறது.
வேதனையை பகிர்ந்து கொள்ளும்
கார்த்திக் அம்மா

2014/06/03

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
 
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா