About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2019/08/24

மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே = கார்த்தி

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

1 comment:

Jeevan said...

வார்த்தை இல்லை அல்லது வரவில்லை எழுதுவதற்கு