About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/10/14

என் அம்மா
எல்லோரும் அம்மாவை பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.பெரிய மனிதர்கள் எல்லாம் அம்மாவை பற்றி எழுத வேண்டும் என்று சட்டம் என்றால், நான் எழுதாமல் இருக்கலாமா?கிச்சா முறைக்காதே.
என் அம்மா ஒரு விசித்திரமான கலவை.பாரம்பரியமும் பண்பாடும் தன் ரத்தத்தில் ஊறிப் போனவர்.ஆனால் அதே அளவு புதுமைப் பெண்.ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்று சாதனையால் சொன்னவர்.ஆங்கில ஆசிரியை என்ற பெயர் கேட்டாலே மானவர்களுக்கு பயம்.அதே அளவு இனிக்க இனிக்க பாடம் நடத்தும் அழகு.எனக்கு எப்படி தெரியும்? நானும் +2 அவர்களிடம்தான் படித்தேன்.பள்ளியில் மாணவர் ஒழுக்கம்,கட்டுப்பாடு,படிப்பு பற்றி சிறிது வெறியாக கூட இருப்பார்கள்.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நேர்மை,சத்தியம்,தூய்மை.மாணவர்கள் பொய் பேசக்கூடாது.காப்பியடிக்ககூடாது.அவ்வளவுதான்.எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வருமோ?சக ஆசிரியர்களே கிட்டே போக முடியாது.ஆனால் ஏதாவதொரு மாணவனோ,மாணவியோ சாப்பிடாமல் வந்துவிட்டால் உடனே தன்னுடைய சாப்பாட்டை கொடுத்து சாப்பிட சொல்லும் இரக்க குணமும் அதிகம்.கண்டிப்புதான் வெளியில் தெரியும்.செய்யும் உதவிகள் பிறர் அறியாமல் செய்வார்.பள்ளியில் கலை நிகழ்ச்சியா,பட்டி மன்றமா,பேச்சுபோட்டியா,விளையாட்டு விழாவா..எதிலும் அவர் பங்கு அதிகமாக இருக்கும்.கலை,இலக்கிய மன்ற விழாவில் அவருடைய compering கேட்பத்ற்கென்றே ஒரு கூட்டம் காத்திருக்கும்...வெளி உலகில் இப்படி சாதனை பெண்ணாக வளைய வரும் அவர் வீட்டிற்குள் வந்து விட்டால்,தலை கீழ் மாற்றம்தான்.யாராவது வந்து பார்த்தால் சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டர்கள்..அப்படி ஒரு சமையல்காரியாக,தோட்டகாரியாக,எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்வார்கள்.தன் கணவருக்கும் தன் மகன்களுக்கும் தன் கையால் சமைத்து போட்டால்தான் திருப்தி.அதுவும் தினம் ஒரு தினுசான,புதிய,புதிய சமையல்.வித விதமாக செய்து அசத்துவார்கள்.இப்படி ஒரு மனைவி எனக்கு கிடைக்கவில்லையே என்று என் காது பட என் அப்பாவிடம் சொல்லி சென்றவர் பல பேர்.
பள்ளியில் இப்படி.வீட்டில் இப்படி.என்ற இரு முகம்.மூன்றாவது முகம் ஒன்று உண்டு.பொய் பேசக்கூடாது.சத்தியம் தவறக்கூடாது.லஞம் வாங்கக்கூடாது.பிறரை ஏமாற்றக்கூடாது.மற்ற யாராவது இந்த தவறு செய்தாலும் பொறுக்காது.எங்கிருந்துதான் அந்த கோபம் வருமோ?கடகடவென்று சண்டைக்கு போய் விடுவார்கள்.தனக்கு சம்பந்தமேயில்லாத விஷயமாக இருந்தாலும் சரி.கண்ணெதிரில் ஒரு அனியாயம் நடந்தால் தீர்ந்தது.அகப்பட்டவன் காலி.ஒரு ஆட்டோவில் பொகும்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் பான்பராக் போட்டால் இறங்குவதற்குள் அவரிடம் இனிமேல் பான்பராக் போடமாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் இறங்குவார்கள். நானும் கேட்பேன்." நீங்கள் சொன்னால் திருந்திவிடுவார்களா"என்று.அதற்கு " திருந்துகிறார்களோ இல்லையோ,சமுதாயத்தில் ஒரு சக மனிதனிடம் சொல்ல வேண்டியது என் கடமை.தார்மீகம். நான் சொல்லாவிடில் என் மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?"பாவம் அம்மா.இந்த குணத்தால் அவர் பட்ட கஷ்டங்கள் எத்தனை?எத்தனை பட்ட பெயர்கள்?திமிர்,கர்வம்,அடங்காபிடாரி,ஆணவம்....எத்தனை போராட்டம்?அவரின் இழப்புகள் கூட அவரின் இந்த குணத்தால்தான் என்று இந்த மன வேதனையிலும் அவரை புண்படுத்தும் இந்த மனசாட்சியில்லாத உலகம்.ஆனாலும் இன்றும் அவர் தன் கொள்கைகளிருந்து மாறவில்லை.இன்றும் அவரால் பொய் பேச முடியாது.பணத்தை காட்டி அவரை அடிமைப்படுத்த முடியாது.அதிகாரத்தை காட்டி பணிய வைக்க முடியாது.அன்பு ஒன்று மட்டுமே அவரை கட்டுபடுத்தும் அதிலும் என் அன்பு அவர்களை மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல.இன்று அது இல்லாமல் அவர் தவிக்கும் தவிப்பு.அம்மா,அம்மா,...என் அம்மா !! யருக்கு கிடைக்கும் இந்த அம்மா?கிடைத்தும் இழந்தது நானா அல்லது நீங்களா...amma..என்ன பதில்?

1 comment:

Krishna Ram Kuttuva Jeyaram said...

Bharathi kanda puthumai pen.