இந்த வார நீயா நானா வில் விவாதிக்க பட்ட பொருள் single parent .
கணவனை இழந்த பெண்கள் பற்றி.(single parent )மனைவியை இழந்த கணவன்கள் பற்றி பேச்சே இல்லை.
விதவைகள் என்று பேசினால் எதிர்ப்பு வரும் என்பதால் இப்படி தலைப்பு.
தமிழில்தான் '' விதவன் '' என்ற சொல் இல்லை.
பேசிய பெண்கள் அனைவரும் தங்களின் கஷ்டங்களை, தங்களுக்கு உடன் பிறந்தவர்கள்,சொந்தங்கள் தரும் பிரச்சினைகள் பற்றியும் ,சமுதாயத்தில்,வேலை பார்க்கும் இடங்களில் படும் இன்னல்களையும் பேசினார்கள்.
நானும் ஒரு தனி மனிதிதான்.என்னை விதவை என்று சொல்லிக் கொள்ளவே மாட்டேன்.
எவனோ ஒருவன் என் பெற்றோரிடம் பேரம் பேசி வரதட்சினை ஒத்து வந்தால் பெரிய தியாகி போல் தாலி கட்டுவான்.வரதட்சினை பேரம் படியாவிட்டால் பக்கத்து வீட்டு பெண்ணை பெண் பார்க்க போய்விடுவான்.
இப்படிப்பட்ட பிசினஸ் திருமணத்தை பற்றிய ஒரு வெறுப்புணர்வு எப்போதுமே எனக்கு உண்டு.
அந்த உத்தம புருஷன் போய் விட்டால் ஒரு பெண்ணுக்கு எத்தனை கொடுமைகள்?
அவள் வெளியே வர கூடாது..குடும்ப உறுப்பினர் யாராவது வெளியே போகும்போது அவள் அவர்கள் பார்வையில் படாத வாறு எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டும்.
எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள கூடாது.
அது வரை '' ஆஹா அவரின் படிப்பென்ன?
வேலை என்ன?
திறமை என்ன?
சாமர்த்தியம் என்ன?
ஆளுமை என்ன ?
சம்பாத்தியம் என்ன ?'' ''
என்று இமயமலையின் உச்சியில் வைத்து கொண்டாடிய அனைவரும் அப்படியே தலை கீழாக மாறி
''உனக்கு என்ன தெரியும்?
நாங்கள் சொல்வது போல்தான் நீ நடக்க வேண்டும் என்று கட்டளை இடுவதென்ன ?
3, 4 வயது குழந்தை கூட என்னை இளக்காரமாக ,கேவலமாக பார்த்து முகவாய் கட்டையை தோளில் இடித்துக் கொண்டு சென்ற கொடூரம் என்ன?
ஒரு நல்ல உடை உடுத்தி வந்தால் அந்த தாயே வெறிக்க பார்த்த அவலம் என்ன ?
என் வீட்டு நாய்க்குட்டிக்கு கூட நீதான் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்ற அகங்காரம் என்ன?
எத்தனை கொடுமைகள்?
எத்தனை சிறுமைகள்?
எத்தனை அவமானங்கள்?
இன்னும் மாறவில்லையா என்று நெறியாளர் ஒன்றும் அறியாதவர் போல் கேட்கிறார்.
நகரங்களிலும் இப்படியா என்று வியக்கிறார்.
படித்த குடும்பம்.
நாகரிகமான குடும்பம் .என்ற குடும்பத்தில்தான் கொடுமைகள் அதிகம்.
போதும் பட்டது என்று வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளும் இந்த சமுதாயம்.
போராட்டம்.
போராட்டம்.
மனம் சலித்து விட்டது.
உறவை வெறுத்து விட்டது.
கலா கார்த்திக்
No comments:
Post a Comment