About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/03/01

என் மகன்

ஒரு மீள் பதிவு
இது கார்த்தி வீடு.கார்த்தியின் சிலை .என் மகன்

கீழே தரப்பட்டுள்ள பதிவு கார்த்தி பணி புரிந்த DELL ல் பணி புரியும் ஒருவர் கார்த்தியைப் பற்றி எழுதியது.
***  ******* ****
கார்த்திக் என்னை விட ஒரு வருடம் சீனியர். வயதிலும் சரி; படிப்பிலும் சரி. படிப்பை பொறுத்த வரைக்கும் சீனியர் மட்டுமில்லை- படு கெட்டியும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெருநிறுவனத்தில் வேலை வாங்கி பெங்களூர் வந்து இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்கு என்ன நடந்தால் என்ன? காலம் நிற்கவா போகிறது? காலம்தான் ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கினால் காலத்தின் வேகத்தோடு ஓடி வர முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகவே நின்று கொண்டான்.
கார்த்திக்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக- 
கார்த்திக்கை நான் பார்த்தது கூட இல்லை. அவனது அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் பெங்களூர் வருவார். நான்கைந்து நாட்களுக்கு விவேக் நகரில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ல் தங்கிச் செல்வார். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்றால் கிராமம் இல்லை. அபார்ட்மெண்ட்தான். எப்பொழுதோ இந்த ஊரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக நிறைய அபார்ட்மெண்ட்களை கட்டியிருக்கிறார்கள். போட்டிகள் முடிந்தவுடன் மற்றவர்களுக்கு விற்றுவிட்டார்கள். மரங்களும்,நிறைந்த குளுமையுமாக அட்டகாசமான அபார்ட்மெண்ட் அது. அங்குதான் கார்த்திக் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். 
கார்த்திக் எங்கள் நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தான். அவன்  எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அதே சமயத்தில் சேர்ந்தவர்கள் இன்றைக்கு சீனியர் டெலிவரி மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். கார்த்திக்கைப் பற்றி அவ்வப்போது இவர்களிடம் பேசியிருக்கிறேன். ‘அவன் இங்கேயே இருந்திருந்தா இந்நேரம் டைரக்டர் ஆகியிருப்பான்’ என்பார்கள். அவ்வளவு திறமைசாலியாம். வேலையில் அடித்து நொறுக்கியிருக்கிறான். நிறையப் பேருக்கு ரோல் மாடலாகவும் இருந்திருக்கிறான். மீட்டிங்கில்‘கார்த்திக் மாதிரி இருங்கள்’ என்று மேனேஜர்கள் தயக்கமே இல்லாமல் சொல்வார்களாம்.
கார்த்திக்கின் அம்மா ‘நிசப்தம்’ வாசிப்பவர். ஒரு முறை விபத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்தக் கட்டுரை ஏதோவிதத்தில் தன்னைச் சலனப்படுத்திவிட்டதாகவும் பெங்களூர் வரும் போது சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் வில்லேஜூக்கு சென்றிருந்தேன். மழை தொடங்கியிருந்தது. அவர்களின் அபார்ட்மெண்ட்டைச் சுற்றிலும் மரங்கள் அதிகம் என்பதால் இருள் சற்று தடிமனாகவே கவ்வத் தொடங்கியிருந்தது.
வீட்டில் கார்த்திக்கின் அம்மா மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை. கார்த்திக் அவரை விட்டுப் போய்த்தான் நான்கைந்து வருடங்கள் ஆயிற்றே. ‘இறந்துவிட்டான்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துவதேயில்லை. 
சொல்லவில்லை பாருங்கள்- கார்த்திக் விபத்தில் இறந்துவிட்டான். அவன் மிக வேகமாக வண்டி ஓட்டுவான் என்று அவர்களது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேகம் என்றால் மின்னல் வேகம். அப்படியான ஒரு வேகத்தில்தான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டுவிட்டான். தலைவிரி கோலமாக அவனைக் கிடத்தி வைத்திருந்த மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடியதாக அவனது அம்மா சொன்னார். ஆனால் பெரிய பலனில்லை. அவர் சென்ற போது அத்தனையும் முடிந்திருக்கிறது. தனது உயிரைக் கொடுத்து வளர்த்திருந்த மகன் இந்த புவியை விட்டு விலகியிருந்தான். 
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருமே  அதனை எதிர்கொள்கிறோம். இருந்தாலும் பெரும்பாலான மரணங்களை பெரும்பாலானவர்கள் கடந்துவிடுகிறோம். ஆனால் கார்த்திக்கின் மரணத்தை அவனது அம்மாவால் கடக்கவே முடியவில்லை. பெருமலையாகவோ அல்லது பெருங்கடலாகவோ மாறி நின்றுவிட்டது. தலைவிரி கோலமாக தனது மகனின் மரணத்தை எப்படி எதிர்கொண்டாரோ அதே புள்ளியில் நின்றுவிட்டார். கிட்டத்தட்ட standstill.
அந்த வீடு கார்த்திக் இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. படுக்கை விரிப்புகள் கூட மாற்றப்படவில்லை. அவன் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேபிள், அவன் ஒட்டி வைத்திருந்த நிழற்படங்கள் என அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அவனது வாழ்வின் இறுதி நொடிகளைத் தனது சக்கரத்தில் சுமந்து சென்ற பைக்கை வீட்டின் வரவேற்பறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். 
கார்த்திக்கின் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரே விஷயம்தான் இருக்கிறது. ''''‘கார்த்திக்’' '''. அங்கிருந்த நாற்பது நிமிடங்களும் அவனது நிழற்படங்களைக் காட்டினார். அவனது நண்பர்களைப் பற்றி பேசினார்- அந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு இப்பொழுது மேனேஜர். இன்னொருவர் முன்னாள் மேனேஜர்,  கார்த்திக்குக்கு நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார், அவனது எழுத்து பற்றிச் சொன்னார், அவனது ஆர்வங்கள் குறித்து உற்சாகமடைந்தார். 
அவனது மின்னஞ்சல்களிலும், அவனது வலைப்பதிவிலும், அவனது டைரிகளிலும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிக் கொண்டிருக்கிறார். ‘தனக்கான செய்தி’ எதையாவது இந்த எழுத்துக்களில் விட்டுச் சென்றிருப்பான் என்று இன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறார். இனியும் அதையேதான் தொடர்வார். இதுதான் அவரது வாழ்க்கை. இதுதான் அவரது உலகம்.
தனது உலகத்தை ஒட்டுமொத்தமாகச்  சுருட்டி ஒற்றை பெயருக்குள் வைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையாரைப் பார்க்கும் போது எனது பெரும்பாலான வார்த்தைகள் வறண்டு போய்விட்டன. தனது வாழ்க்கையின் மிச்சக்காலம் முழுவதையும் இப்படியே கழிக்கப் போகிறேன் என்ற அவரது வைராக்கியம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை. அதை அவர் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பயத்தில் அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டேன். அவரது கண்களை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன்.
பேச்சுவாக்கில் அவனது நினைவிலேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாட்கள் மட்டும்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உருக்குலைந்து போயிருக்கிறார். அவர் காட்டிய பழைய நிழற்படங்களில் இருந்ததற்கும் தற்போதைய உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்.  ஐந்தாறு வருடங்களில் முடி மொத்தமாக நரைத்து கண்கள் குழிவிழுந்து, தோல் சுருங்கி தனது உருவத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லாமல் மாறிவிட்டார். ஒவ்வொரு மாதமும் டிபன் பாக்ஸில் தக்காளிச்சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் வந்துவிடுகிறார். தனது மகன் வாழ்ந்த வீட்டில், தனது மகனின் மூச்சுக் காற்று நிறைந்த இந்த இடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு திரும்பச் செல்கிறார். யாருமே இல்லாத வீட்டில் அவரும் கார்த்திக்கும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனது தலையை தனது மடி மீது வைத்து வருடுகிறார். அவனுக்கு ஊட்டி விடுகிறார். அவன் உற்சாகமாக வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கிறான். நான்கைந்து நாட்களில் அவர் திரும்பச் சென்றவுடன் அந்த வீட்டின் மீது பெரும் அமைதி கவிகிறது. அங்கு கார்த்திக் தனிமையில் தனது அம்மாவுக்காக காத்திருக்கக் கூடும். இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாத தனிமை அது.//
*************   **************
 இந்த  பதிவில் சில திருத்தங்கள்.
1.கார்த்தி இவரை விட வயதில் இளையவன் .
2. photos (நிழற்படங்கள் -கார்த்தியுடையது ) நான் ஒட்டியது. அறை  முழுவதும் கார்த்தியின் படங்களே.
3* .கார்த்தி அங்கு தனிமையில் இல்லை. நான் வரும் போது என்னுடனே அவனும் வருகிறான். பேருந்தில் என் மடியில் அமர்ந்து வருகிறான்.
4.கார்த்திக் உலகை விட்டு நீங்கி 13
வருடங்கள் ஆகின்றன.
5. கார்த்தியும் நானும்  சேர்ந்துதான் வீடு வாங்கினோம்.(பணத்தை பற்றி சொல்லவில்லை.அதை நான் என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நானும் கார்த்தியும் அந்த அலுவலகம் சென்ற போது அங்கு இருந்தவர்கள் கார்த்தியிடம் என்ன காட்டி '' உன் அக்காவா ?''என்று கேட்டார்கள் )
6. கார்த்தி தன்னை விட வயதில்  பெரியவன் என்று சொல்லும் இவர் கார்த்தியை அவன் இவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லியிருக்கலாம்.
       ஆனாலும் என்னைப் பற்றியும் கார்த்தியை பற்றியும் பதிவிட்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .நன்றி.
கார்த்திக் அம்மா

2 comments:

Massy spl France. said...

மனதை மிகவும் நெகிழ வைத்த நிகழ்வுகள். சோகம், ஏக்கம், துயரம், மிகுந்த மன வலி, மனப்பாரம், அழுத்தம், தனிமை, சூன்யம், வெற்றிடம், மனப்பிரமை ...இவைகள் அனைத்தும் மனித வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி விடுகின்றன.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன், இதே தமிழ்மணத்தில் "ஜொசெபின் கதைக்கிறேன்" எனும் தலைப்பில், ஜொசெபின் தன் கணவர் விபத்தில் இறந்த அன்றிலிருந்து பல தொடர் பதிவுகளில் தனது மன வலிகள், மீரா துயரம், சிதைந்து போன அவரது வாழ்க்கை, பழைய நினைவுகள் என எழுதிவந்தார். படிக்கும்போது மிகவும் வேதனையாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

இது போன்ற தருணங்களில், தனிமையும் சூன்யமும்தான் நமக்கு துணையாக காலக்கடலை தாண்ட உதவிக்கு வருகின்றன. காலமும் மௌனமும்தான் இவ்வலிகளுக்கு அரிய மருந்து.

Angel said...

மனதை கனக்க வைத்தது . ஒருபுறம் மலைப்பாயிருக்கு இத்தனை அன்பை நான் கண்டதில்லை .

அன்பு மகன் மீது நீங்கள் வைத்துள்ள அளவில்லா அன்பை வார்த்தைகளால் சொல்லிட முடியாது .ஒவ்வொரு பதிவிலும் நான் தொடர்ந்து தவறாமல் வாசிக்கிறேன் .
டேக் கேர் .